பிடிபட்ட புல்லட் இப்போது எங்கே? - நடுங்கிய மக்கள் நிம்மதி பெருமூச்சு
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் பகுதியில், புல்லட் என்ற காட்டு யானை 35க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து சோதப்படுத்திய நிலையில், யானை பிடிப்பதற்காக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யானையை பிடிப்பதற்காக, இரு கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கியுடன் வரவழைக்கப்பட்டனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சீனிவாசன் , விஜய் என்ற இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்த நிலையில், நேற்று மூலக்கடை புதரில் இருந்த யானையை அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமரா மூலமாக கண்டறிந்தனர். புலி, சிறுத்தை போன்ற சத்தம் எழுப்பி சாலை ஓரத்திற்கு கொண்டு வந்து மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அந்த யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றி பொள்ளாச்சி, ஆனைமலை வழியாக டாப்ஸ்லிப் வனப்பகுதிக்கு கொண்டு சென்று, வனப்பகுதியில் விடுவித்தனர்.