நெல்லை மாயாண்டி கொலை - தமிழகம் முழுவதும் அலர்ட் மோட்
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கூடுதலாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பிஸ்டல் ஏந்திய காவல் உதவி ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையில், எஸ்எல்ஆர் ஏந்திய ஆயுதப்படை போலீசார் 2 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ஆயுதப்படை போலீசார் 5 பேர் வழக்கமான பாதுகாப்புப் பணியில் உள்ள நிலையில், டிஜிபி உத்தரவின்பேரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கைத் துப்பாக்கியுடன் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆயுதப்படை சேர்ந்த காவலர்கள் மெட்டல் டிடெக்டருடன் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் கொண்டுவரும் பொருட்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கு பின்பே நீதிமன்றத்திற்கு உள்ளே செல்பவர்களை அனுமதித்தனர்.
கோவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மொத்தமுள்ள 4 நுழைவு வாயில்களிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்றத்திற்கு உள்ளே வருவோரும் வெளியில் செல்வோரும் பாதுகாப்பு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.