தமிழகம் முழுவதும் கோயில்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்
மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜைய விமர்சையாக தொடங்கியது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் கோதண்டராமர் கோவிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலையிலேயே பஜனை பாடல்களை பாடியபடி, நான்கு ரத வீதிகளை வலம் வந்த பக்தர்கள், திருப்பாவை திருவெம்பாவை பாடி சுவாமியை வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கநாதரை தரிசித்தனர்.