ஆசிரியர் சொன்னதை தட்டாமல் செய்ததால்... பறிபோன மாணவனின் பார்வை... அதிர்ந்த அப்பா - பரபரப்பில் மதுரை

x

அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்த காரியத்தினால் மாணவனின் எதிர்காலமே கேள்விக் குறியான நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூரில் உள்ள ஊராட்சி மன்றத்தில் துப்பரவு தொழிலாளராக வேலை பார்ப்பவர் வெள்ளையன். இவரது மகன் யுவராஜ் கப்பலூரில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துமாறு ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து யுவராஜூம் பள்ளியைச் சுத்தம் செய்து இருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரக்குச்சி ஒன்று யுவராஜின் ஒரு கண்ணில் பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. அப்போது உடனடியாக யுவராஜை ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளையன் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

அங்கு யுவராஜை சோதித்த மருத்துவர்கள் கண் பார்வை முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வை முழுமையாகக் கிடைப்பதை உறுதியாகச் சொல்ல முடியாது எனத் தெரிவித்து இருக்கின்றனர். நடந்த சம்பவம் தொடர்பாகப் பள்ளி தரப்பில் எந்த உதவியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவனின் தந்தை காவல் நிலையத்திலும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்து இருக்கின்றார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாணவனுக்கு நிதி வழங்கக் கோரியும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய வயதில் அரசு பள்ளி மாணவனின் கண் பார்வை பாதிக்கப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்