ஒரு சமுதாய மக்களால் பரபரப்பு.. குலுங்கும் மதுரை.. தினந்தினம் பதற்றம்.. ஓயவே மாட்டோம் என திட்டவட்டம்

x

எங்களது பிள்ளைகளுக்கு காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என 100-க்கும் அதிகமான பள்ளி மாணவர்களுடன் அந்த சமுதாய மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. பார்க்கலாம்..விரிவாக..

மதுரை மாவட்டம், பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் தான், இந்த போராட்டம் 4 நாட்களை தாண்டி தொடர்கிறது.

இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசிக்கிறார்கள். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் படிக்கும் இவர்களது குழந்தைகளுக்கு இந்து காட்டுநாயக்கன் எனும் பழங்குடியினர் சாதி சான்றிதழ், கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்ததாக தெரியவருகிறது.

ஆனால், தற்போது பல்வேறு காரணங்களுக்காக பழங்குடியினர் பிரிவில் இந்த சமுதாய மக்களுக்கு இந்து காட்டுநாயக்கன் என்ற சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் மறுப்பதாக இந்த சமுதாயத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஆகவே, இதைக் கண்டித்தும்.. முன்பு வழங்கியதைப் போலவும் பழங்குடியினர் பிரிவில் காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, இந்த சமுதாய மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மதுரை பரவை பகுதியில் சத்தியமூர்த்தி நகரில் 5 ஆவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து 1,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பள்ளிக்குப் போக வேண்டிய தங்களது பிள்ளைகளான பள்ளி மாணவர்களை, காட்டுவாசி போல் இலை தழைகளைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட வைத்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை எனவும் இந்த சமுதாய மக்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கன் சமூக மக்களிடம் மதுரை கோட்டாட்சியர் ஷாலினி போராட்டத்தை கைவிடக் கோரி, பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சாதி சான்றிதழ் கேட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் சாதி சான்றிதழ் கேட்டு மேல்முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆனால் போராட்ட குழுவினர் அதை ஏற்க மறுத்து ஏற்கனவே தங்களது சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கூறினர்.

இதை அடுத்து, சாதி சான்றிதழுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யுமாறு அந்த சமூக மக்களுக்கு அறிவுறுத்தினார். ஆனால், சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த விவகாரத்தில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியரும், முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்