கல்யாண வரன் தேடிய இளம்பெண்.. கழுத்து ரத்தம் குடித்த அதிபயங்கரம் - தாயே முகம் பார்க்க முடியா கோரம்

x

வேலூர் மாவட்டம் வி கே குப்பத்தை அடுத்துள்ள துருவம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். விவசாய வேலைகளை செய்து வருகிறார் இவர். இவரின் மனைவி வளர்மதி.. இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தை உள்ள நிலையில் அதில் 4 பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடைசி பெண்ணான அஞ்சலியை கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் பட்டப்படிப்பைப் படிக்க வைத்து இருக்கிறார்கள். துருவம் கிராமத்திலேயே முதல் பட்டப்படிப்பை முடித்த அஞ்சலி கடந்த இரண்டு ஆண்களாகத் தாய் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.

துருவம் கிராமம் காப்புக் காட்டுக்கு அருகே மிக அருகே உள்ள பகுதி என்பதால் சாலை வசதி, பேருந்து வசதி, மின்சாரம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத கிராமம் ஆகும். இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் வீட்டின் அருகே சென்ற அஞ்சலியை அங்கே மறைந்து இருந்த சிறுத்தை பாய்ந்து தாக்கியுள்ளது.

உதவி கேட்டு குரல் கொடுக்க நினைத்த அஞ்சலியை நொடிப் பொழுதில் அவரது கழுத்தைக் கடித்துக் கொன்றது. சிறுத்தையுடன் அருகே கிடந்த அஞ்சலியைப் பார்த்த உறவினர் ஒருவர் கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறது. உறவினரின் கூச்சலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து பார்த்த போது அஞ்சலி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அஞ்சலியின் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, காவல்துறை மற்றும் கோட்டாட்சியர் ஆகியோருடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் மாவட்ட எஸ்.பி மதிவாணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகத் தெரிவித்துச் சென்றார்.

அஞ்சலியின் சடலத்துடன் போராடிய கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்குப் பின் சடலத்தை எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை நடத்தி குடும்பத்தினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை சென்ற பாதையில் கேமராக்களை வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். தனது மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட ஒரு விவசாய தந்தை மகளை இழந்த நிற்பது கொடுமையின் உச்சம்.


Next Story

மேலும் செய்திகள்