ராம்நாட்டில் முளைத்த புது `கல்யாண ராணி' - பல ஆண்களை பதற வைத்த பெண் | Karur | Ramanathapuram
கரூர் மாவட்டம், புஞ்சை கடம்பக்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரேணுகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது 6 பவுன் தாலிக்கொடி, ஒரு பவுன் தங்கத்தோடு, அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை ரேணுகாவுக்கு ரமேஷ் போட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேணுகாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, அவருக்கு ஏற்கெனவே மெய்யர் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் இருப்பதும், பின்பு பழனிகுமார், ராஜ், முபாரக் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்து ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். மேலும், கோவையில் லோகநாதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் பணம், நகைகளுடன் அங்கிருந்து வெளியேறி, அதன் பிறகு ரமேஷை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்துவிட்டதை அறிந்து, கடந்த 15-ஆம் தேதி திருமணத்தின்போது போட்ட நகைகளுடன் அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார். பின்னர், அவரின் கூட்டாளி ஜெகநாதன் என்பவர் மூலமாக ரமேஷிடம் 20 லட்சம் பணமும், 20 பவுன் நகையும் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், ரேணுகாவை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.