"சாப்பிட்ட வாயை கூட கழுவுவதற்குள் முடிந்த பிஞ்சு உயிர்" - கண்ணீர் விட்டு கதறும் தாய்
கிருஷ்ணராயபுரம் அருகே கட்டளை மேட்டு வாய்க்கால் கரை பகுதியில் கணபதி-சித்ரா தம்பதியர் வசித்து வருகின்றனர். சித்ரா தனது குழந்தை கிஷாந்துக்கு, வீட்டிலிருந்து வெளியே வந்து சாதம் ஊட்டியுள்ளார். பின்னர் வீட்டினுள் சென்று மீண்டும் சாதம் எடுத்து வந்து பார்த்தபோது கிஷாந்த் அங்கு இல்லாததால், வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து வந்த ஊழியர்கள், கட்டளைமேட்டு வாய்க்கால் வெளியே செல்லும் தண்ணீரை குறைத்து, தண்ணீரில் இறங்கிய தேடினர். இதில் கிஷாந்த் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால், தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணபதி-சித்ரா தம்பதிக்கு திருமணமாகி சுமார் பத்து ஆண்டுகள் ஆகும் நிலையில், ஏற்கனவே மூன்று வயதில் ஆண் குழந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்து உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து,திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருந்து கிஷாந்தை மூன்று மாதமாக இருக்கும்போது தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில்,அந்தக் குழந்தையும் தற்போது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.