ஸ்கூலுக்குள் புகுந்து... மாணவனை குதறிய நாய்... கரூரில் அதிர்ச்சி
பெரிய குளத்துபாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் - புனிதா தம்பதியரின் மகன் தரணீஷ் வெங்கமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி அருகிலேயே ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையும், மீன் மார்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு போடப்படும் கழிவுகளை உட்கொண்டு தெருநாய்கள் அப்பகுதியில் அதிகளவில் சுற்றி வருகின்றன. பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம்போல் சென்ற நிலையில், மாணவர் தரணீஷை, பள்ளி வளாகத்தில் புகுந்த வெறிநாய் ஒன்று கடித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. இதனைப் பார்த்த ஆசிரியர்கள், மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, நாய்கள் கருத்தடை செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.