ஆசிரியரின் ஆக்ரோஷத்தால் 7ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. ரத்தத்தை பார்த்ததும் பதறிய தாய்

x

ஆசிரியர் பணியே அறப்பணி...அதற்கே உனை அர்ப்பணி என்பார்கள்... அந்த அர்ப்பணிப்பில் கண்டிப்பு அவசியம்... ஆனால் கண்டிப்பு கண்மூடித் தனமாக இருந்தால் அர்ப்பணிப்பு வீணாகி விடும் என்பதைப் போல அமைந்துள்ளது இந்தக் குற்றச்சாட்டு...இவர் தான் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கிஷோர்...

திருநள்ளாறு அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் கிஷோர், வழக்கம் போல் பள்ளி சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்...

வீட்டுக்கு வந்ததும் காது வலியால் அலறித் துடித்த கிஷோர் அழுது கொண்டே அதற்கான காரணத்தைக் கூறியதைக் கேட்டு சிறுவனின் தாய் பதறிப்போனார்..

காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கிஷோரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்...

தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கிஷோருக்கு ஒரு பக்க காதில் ஜவ்வு சேதமடைந்து விட்டதாகக் கூறவே...செய்வதறியாது பரிதவித்துப் போயினர் கிஷோரின் பெற்றோர்...

தொடர்ந்து மகனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் மீது தந்தை வீரபிரபு போலீசில் புகாரளித்தார்... ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது...

இதைத் தொடர்ந்து நீதிகேட்டு ஆட்சியர் அலுவலகம் ஏறிய கிஷோரின் தாய் ஜெயஸ்ரீ, ஆட்சியர் மணிகண்டனிடம் கண்ணீர் மல்க புகாரளித்து விட்டுத் திரும்பினார்...

புகாரைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் நிச்சயம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்...

கல்வி எனும் உளியால் குழந்தைகளை செதுக்கி சிற்பமாக்க வேண்டிய ஆசிரியர்கள்...உளியை ஓங்கி அடித்தால் சிற்பம் சிதைந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன...


Next Story

மேலும் செய்திகள்