போலீசை பார்த்ததும் ஓடி ஒளிந்த ராணுவ வீரர்.. கதவை உடைத்து கைது செய்த பகீர் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வீட்டின் கதவை உடைத்து, ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை அருகே கூட்டமாவு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு விடுமுறைக்கு வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த நபரிடம் அடிதடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரில், ராஜா கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் ராணுவ வீரர் ராஜாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜாவை கைது செய்ய அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். போலீஸை பார்த்ததும் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட ராஜா, கதவை திறக்கவே இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ராஜாவை கைது செய்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.