கணவர் இறந்த சோகத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி

x

கோபி அருகே உள்ள துறையம்பாளையத்தில் கணவனும், கணவனின் பாட்டியும் விபத்தில் உயிரிழந்ததை அறிந்த காதல் மனைவி 100 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி.

கிராம மக்களுடன், தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி இளம் பெண்ணை மீட்டனர்.


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள துறையம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸ்க்கியூட்டிவாக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குன்னத்தூர் அருகே உள்ள தொரவலூரை சேர்ந்த இலக்கியா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது இலக்கியா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் நந்தகுமாரும், அவரது பாட்டி சரஸ்வதியும் பவானியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

பவானி அடுத்த ஜம்பை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே நந்தகுமாரும், சரஸ்வதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் நந்தகுமார் மற்றும் சரஸ்வதியின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்கு பிறகு துறையம்பாளையம் கொண்டு செல்லப்பட்டது.

காதல் கணவன் விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்த இலக்கியா, வீட்டின் அருகே இருந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற கோபி தீயணைப்புத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி இலக்கியாவை உயிருடன் மீட்டனர்.

கிணற்றுக்குள் குதித்ததில், இருகால்கள் மற்றும் கையில் முறிவு ஏற்பட்ட நிலையில் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இலக்கியா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காதல் கணவன் இறந்த துக்கத்தில், நான்கு மாத கர்ப்பிணி பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்