அலுங்காமல் குலுங்காமல் அச்சு பிசகின்றி 3அடி வளர்ந்த வீடு- ஆச்சர்யமாக பார்த்து செல்லும் மக்கள்
தனது தந்தை நினைவாக உள்ள வீட்டை இடிக்க மனம் இல்லாமல் ஒட்டு மொத்த வீட்டையுமே ஒருவர் 3 அடிக்கும் மேல் தூக்கி அசத்தியுள்ளார்.. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் பகுதியை சேர்ந்தவர் செய்யது அபுதாஹிர் என்பவர் தான் இதை செய்து காட்டியுள்ளார். விவசாயியான இவர், பரமக்குடி திருவள்ளுவர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தந்தை சிக்கந்தர் பாட்சா, 1984 ஆம் ஆண்டு பசும்பொன்னில் இருந்து பரமக்குடிக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்து உள்ளார். பிறகு, பரமக்குடி திருவள்ளுவர் காலனியில் சொந்தமாக 1000 சதுர அடியில் கட்டிய வீட்டை, தனது மகன் செய்யது அபுதாஹிருக்கு, அவரது தந்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்.
இந்த சூழலில் தான், 2 தலைமுறைகளைக் கண்ட இந்த வீடானது சாலையை விட 2 அடிக்கு கீழ் பள்ளமாக இறங்கி விட்டதால், மழைநீர் வீட்டிற்குள் நுழைந்து வந்திருக்கிறது. இருப்பினும், இந்த வீட்டை விட்டு வெளியேற மனம் இல்லாத மொத்த குடும்பத்தினரும் வீட்டை இடிக்காமலே ஜாக்கிகளைக் கொண்டு தூக்கி உயரத்தை அதிகரிக்க முடிவு செய்தனர்.
இதற்கான பணியை, சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 15 கை தேர்ந்த 15 கட்டுமானத் தொழிலாளர்கள் இணைந்து வீட்டை சுமார் 100 ஜாக்கிகளைப் பயன்படுத்தி அச்சு பிசுகாமல் அப்படியே, 3 அடிக்கு உயர்த்தி அசத்தி இருக்கின்றனர்.
வீட்டை இடித்து விட்டு மீண்டும் புது வீடு கட்ட ஆகும் செலவை விட, இப்படி ஜாக்கிகளைக் கொண்டு வீட்டை தூக்குவதற்கு ஆகும் செலவு கம்மி எனக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் மட்டுமே இது போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடுகளை தூக்கும் பணியானது, இப்போது ராமநாதபுரத்தில் முதல்முறையாக நடந்திருப்பதாக கூறுகிறார், அந்த பகுதியைச் சேர்ந்த சசிகுமார்..
தந்தை அன்பளிப்பாக வழங்கிய 39 ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்க மனம் இல்லாமல், ஜாக்கிகளைப் பயன்படுத்தி 3 அடிகள் உயர்த்தி கம்பீரம் குறையாமல் நிறுத்தியுள்ள, செய்யது அபுதாஹீரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.