செந்தில் பாலாஜி வழக்கு... ``திரும்ப பெறாவிட்டால்..'' உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை விசாரிக்க சென்னை முதன்மை நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை எனக்கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அதற்கு காரணமான அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் , எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார். அப்போது, வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வழக்குக்கு தொடர்பில்லாத நபர் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்