அரசு வேலைக்கு ட்ரை பண்ணுபவர்களே உஷார்..! - அரசு அதிகாரி போர்வையில் டுபாக்கூர் ஆபிசர்..
அரசு வேலை கிடைக்கலனு, தன்னையே ஒரு கவர்மெண்ட் ஆபீசரா அறிவிச்சிகிட்டு மோசடியில இறங்கியிருக்காரு ஒரு பலே ஆசாமி... உதகையில் உதயமான மோசடி மன்னனின் பின்னணி என்ன?
தமிழக அரசு முத்திரை பதித்த அப்பாய்ண்மெண்ட் ஆர்டர்...
அதிகாரியின் கையெழுத்திட்ட ஐடி கார்டு..
காரில் இருந்தவாறு கத்தையாக பணம்...
மிடுக்கான தோரணை...
இதையெல்லாம் பார்க்கும் போது இவரை அரசு அதிகாரி என்று சொன்னால் நம்பாமல் இருப்பது சற்று கடினம் தான்.
இந்த நம்பிக்கையை மூலதனமாக வைத்துக் கொண்டு பல லட்சங்களை ஆட்டையை போட்டிருக்கிறார் இந்த மோசடி மன்னன்.
இந்த புருடா ஆசாமியின் பெயர் மனோ. 40 வயதாகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள ஓரசோலை பகுதியை சேர்ந்தவர்.. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்..
ஆரம்பத்தில் இருந்தே அரசு அதிகாரியாக வேண்டும், சைரன் வைத்த காரில் செல்ல வேண்டும் என்ற ஆசை மனோவிற்கு இருந்திருக்கிறது.. ஆனால் பல முறை தேர்வுகள் எழுதியும் அவரால் தோல்விகளை மட்டுமே சந்திக்க முடிந்திருக்கிறது..
என்ன தான் அரசு வேலையின் அதிஷ்ட காத்து தன் மேல் விழ வில்லை என்றாலும் அதை பெரிது படுத்தாமல் அவரின் ஆசையை அவரே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்...
ஆம்... தன்னை ஒரு அரசு அதிகாரி என பிரகடனப்படுத்தி கொண்ட மனோ, கோத்தகிரி பேரூராட்சி உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாக எல்லோரிடமும் கூறியிருக்கிறார்.
அதோடு உள்ளாட்சி துறை உள்ளிட்ட சில துறைகளில் அரசு வேலை இருப்பதாகவும் சிறிது பணம் செலவு செய்தால் அதை வாங்கிவிடலாம் என்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் கூறியிருக்கிறார்.
தங்கள் குடும்பத்திலும் ஒரு அரசு அதிகாரி உருவாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் அந்த பகுதி வாசிகளும் அவர் கேட்ட பணத்தை கொடுத்திருக்கிறார்கள்..
மனோவும் பணம் வாங்கியவர்களுக்கு அரசு முத்திரையோடு அப்பாய்மெண்ட் ஆர்டரையும் ஐடி கார்டையும் அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்..அந்த ஆர்டர்களை பெற்று கொண்டவர்கள் சந்தோசத்தில் அலுவலகத்திற்கு சென்று வேலையில் சேர நினைத்திருக்கிறார்கள்.. ஆனால் அங்கு இருந்த அதிகாரிகள் அது போலி ஆணை என சம்பந்தபட்டவர்களிடம் விவரத்தை சொல்லியிருக்கிறார்கள்..
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொதித்து போன பாதிக்கப்பட்டவர்கள் மனோவிடம் வந்து நியாயம் கேட்ட போது அவர் அதற்கான பதிலை மிரட்டல் தொணியில் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் உதக மண்டலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் கொடுத்திக்கிறார்கள்.. புகாரை பெற்று கொண்ட ஆட்சியர் உடனடியாக காவல் துறையினரிடம் சொல்லி மனோவை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்திருக்கிறார்..
போலி அரசு அதிகாரி மனோவை கோத்தகிரியில் வைத்து போலீசார் கைது செய்து அழைத்து வந்திருக்கிறார்கள்.. இந்த விசயம் மேலும் அவரால் ஏமாற்றப்பட்டவர்களின் காதுகளுக்கு சென்றிருக்கிறது... அவர்களும் தங்கள் பங்கிற்கு மனோவின் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்
அரசு அதிகாரி என்ற போர்வையில் நீலகிரியில் வட்டமடித்து வந்த மனோ இன்னும் எத்தனை பேரை இதுவரை ஏமாற்றியிருக்கிறார்.. எவ்வளவு தொகையை அவர்களிடம் இருந்து கறந்திருக்கிறார் என்ற மொத்த விவரமும் அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் தான் தெரிய வரும்..