Freezer Box-ல் மாமியார் உடல்... பிணத்தை பார்த்து அழுத போதே மருமகள் மரணம் - ICU-ல் துடிக்கும் 3 உயிர் - கோவையில் அதிர்ச்சி

x

கோவை கணபதி கே.ஆர்.ஜி. நகர் மூன்றாவது வீதியில் தான், இந்த சோகம் அரங்கேறியுள்ளது. இந்த பகுதியில் வசித்த வந்த ராமலட்சுமி என்ற 85 வயதான மூதாட்டி இயற்கை மரணம் அடைந்திருக்கிறார்..

இதை அடுத்து மூதாட்டியை அடக்கம் செய்வதற்காக, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மூதாட்டியின் வீட்டில் குவிந்திருந்தனர். அப்போது, Freezer Box-க்குள் ராமலட்சுமியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது..

இந்த சூழலில் தான், இன்று காலை சுமார் 10.30 மணியளவில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், Freezer-ல் இருந்த மூதாட்டியின் உடலை குளிரூட்டுவதற்காக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஓடிக் கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதால், அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாகி உள்ளது..

இப்படி ஏற்பட்ட புகை மண்டலத்திற்கு நடுவே, அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட, அடுத்த நொடிக்குள் திடீரென ஜெனரேட்டரில் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது..

ஜெனரேட்டர் எரிந்த தீயானது மள மளவென.. சடலம் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீஸரிலும் தொற்றிக்கொண்டது.. இதனால், அங்கிருந்த அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கவே, துக்க வீடு முழுவதும் பரபரப்பானது..

இந்த சூழலில் தான் பத்மாவதி, பானுமதி, ஸ்ரீராம், ராஜேஸ்வரன் ஆகிய 4 பேர் ஒரு அறையில் மாட்டிக் கொண்ட நிலையில், தீக்காயங்களுடன் மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளனர்.

இதையடுத்து ஒருவழியாக, தீக்காயம் அடைந்து போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இதில் துரதிர்ஷ்டவசமாக 55 வயதான பத்மாவதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. மற்ற 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க நிகழ்ச்சிக்காக சென்ற உறவினர்கள் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பத்மாவதி அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருவதும், இவர் உயிரிழந்த மூதாட்டியின் மருமகள் என்பதும் குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்