தரக்குறைவாக பேசிய பைனான்ஸ் ஊழியர்- கூலித் தொழிலாளி தற்கொலை
உத்திரமேரூர் அருகே உள்ள ரெட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகத்தில் செயல்படும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனதில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி சிறுக சிறுக செலுத்தி வந்ததுள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு, ராஜேந்திரனுக்கு கை, கால் செயலிழந்து நடக்க முடியாமல் போனதால், பைனான்ஸ் நிறுவனத்திற்கு முறையாக கடன் தவணை செலுத்த முடியாமல் போனது. இந்நிலையில், பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஒருவர், வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தரக்குறைவாக பேசி விட்டுச் சென்றதால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, உத்திரமேரூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரனின் உறவினர்கள் புகார் கொடுத்தபோது, காவல் நிலையத்தில புகாரை வாங்காமல், புகார் தர வந்தவர்களை தரக் குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் உறவினர்கள், காவல் உதவி ஆய்வாளர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வரை, இறந்தவரின் உடலை வாங்க மாட்டோம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் ராஜேந்திரனின் உடலை பிரதேச பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.