தந்தை இறந்தது தெரியாமல் உடலுடன் 5 நாளாக வசித்த மகன் - வீட்டுக்கு வாடிக்கையாக வருபவர்கள் திடுக் தகவல்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், தந்தை இறந்தது கூட தெரியாமல், ஐந்து நாட்களாக சடலத்தின் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன் இருந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி வடிவேல் முதலியார் தெருவை சேர்ந்தவர் 70 வயதாகும் கோவிந்தசாமி. இவரது மகன் அரவிந்தன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. கோவிந்தசாமியின் வீடு கடந்த ஐந்து நாட்களாக உள்பக்கமாக பூட்டியே இருந்துள்ளது. அப்பகுதியில் தெருக்களை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தபோது அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தபோது, கோவிந்தசாமி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது மகன் அரவிந்தன், தந்தை இறந்தது கூட தெரியாமல் அருகிலேயே அமர்ந்தது தெரியவந்தது. அவ்வப்போது தந்தையை துணியால் துடைத்து விட்டு, துணியை போர்த்திவிட்டு வந்த நிலையில், கோவிந்தசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.