நெருங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அதிமுகவை அழுத்தும் வழக்கு | EPS | ADMK | Erode Election
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், வழக்குகள், ரெய்டு என அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் வந்து விட்ட நிலையில், பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உட்பட ஏராளமான மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அந்த விசாரணைக்கு சமீபத்தில் தடை விதித்தது. இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் வீடுகளில் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்வது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சமீப காலமாக அ.தி.மு.க. குறித்து அதிகம் விமர்சிக்காத பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னெடுத்த அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகார போராட்டங்களை வரவேற்றுள்ளார். இதே விவகாரத்தில் அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டதை, மற்ற கட்சிகள் விமர்சித்த நிலையில் அ.தி.மு.க. மட்டும் விமர்சிக்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.வுக்கு பல நெருக்கடி தரப்படுவதாகவும், அதேசமயம் பா.ஜ.க. உடன் அ.தி.மு.க. இணக்கம் காட்டுவதாகவும் குறிப்பிடும் அரசியல் விமர்சகர்கள், ஈரோடு இடைத்தேர்தலில் இரு கட்சிகளும் எடுக்கும் முடிவுகள் குழப்பங்களுக்கு விடை சொல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.