`ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமலாகுமா? நாடே எதிர்பார்க்கும் EPS முடிவு..மோடியின் உச்சபட்ச கனவு ADMK கையில்

x

நாடாளுமன்றம், மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதற்கான மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், திட்டம் சாத்தியமாகுமா...? அதிலிருக்கும் சவால்கள் என்ன...? என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு

இந்தியாவில் 1952 தொடங்கி 1957, 1962, 1967 வரையில் நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றன.

பின்னர் பல்வேறு காலக்கட்டங்களில் புதிய மாநிலங்கள் உருவாக்கம், நாடாளுமன்றம், சட்டப்பேரவை கலைப்பு காரணங்களால் இந்த நடைமுறை மாறியது.

இப்போது மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தலை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 83 உட்பிரிவு 2-ல் திருத்தம் செய்ய வேண்டும். ஆம் நாடாளுமன்ற பதவிகாலம் 5 ஆண்டு காலம் என பிரிவு சொல்கிறது. இதேபோல் சட்டப்பிரிவு 172 உட்பிரிவு ஒன்றிலும் திருத்தம் அவசியமாகும். இந்த பிரிவு மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் 5 ஆண்டுகள் எனச் சொல்கிறது.

ராம்நாத் கோவிந்த் கமிட்டியும் இந்த திருத்தங்களை பரிந்துரை செய்துள்ளது. இந்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகும். அதுபோக சட்டம் அமலான பல மாநிலங்களில் அரசுகளின் பதவிக்காலம் குறையும்.

அதாவது ஒரே நாடு, ஒரே தேர்தல் 2029 நாடாளுமன்றத் தேர்தலோடு அமலுக்கு வந்தால், மாநில அரசுகளின் பதவிகாலம் குறையும்..

நாட்டில் கடந்த வருடம் தேர்தல் நடைபெற்ற 10 மாநிலங்களில் 2028-ல் அடுத்த தேர்தல் நடைபெறும். அப்போது ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் பதவிக்காலம் ஓராண்டு அல்லது அதற்கு குறைவாக இருக்கலாம்.

தமிழக சட்டப்பேரவைக்கு 2026-ல் தேர்தல் நடைபெறும். புதிதாக அமையும் அரசாங்கத்தின் பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகளில் முடியலாம்.

அப்படி 2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு வந்து, ஒரு மாநிலத்தில் பதவியேற்கும் அரசாங்கம் பாதியில் கவிழ்ந்தால் அப்போது இடைக்கால தேர்தலை நடத்தலாம் என கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

அப்படி இடைக்கால தேர்தலில் பதவியேற்கும் அரசாங்கம் 2034 தேர்தல் வரையில் மட்டுமே பொறுப்பில் இருக்கலாம்.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும், பாஜக கூட்டணியில் முக்கிய இடம் வகிக்கும் தெலுங்கு தேசம்... ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவிக்கின்றன. கருத்து கேட்கப்பட்டபோது அதிமுகவும் ஆதரித்தது. இப்போது செக் நாடாளுமன்றத்தில் உள்ளது.

ஆம் திட்டத்திற்கு அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதால் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு அவசியமாகும்.

543 எம்.பி.க்களை கொண்ட மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற 362 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் பாஜக கூட்டணிக்கு அவையில் 293 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.

இதேபோல் மாநிலங்களவையில் இப்போது 231 எம்.பி.க்கள் உள்ள நிலையில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவை பெற 154 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும். ஆனால் பாஜக கூட்டணிக்கு 121 எம்.பி.க்கள் ஆதரவே உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு 85 எம்.பி.க்கள் உள்ளன.

இதுவே இரு கூட்டணியிலும் இடம்பெறாத ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பாரதிய ராஷ்டீரிய சமிதி கட்சிகளுக்கு 19 எம்.பி.க்கள் உள்ளன. அதுபோல் இந்தியா கூட்டணி பக்கம் சாயாத அதிமுகவுக்கு 4 எம்.பி.க்களும், மாயாவதி கட்சிக்கு ஒரு எம்.பி.யும் உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரையில், திட்டத்தை செயல்படுத்த 8 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் செலவு பிடிக்கும் என தெரிவித்திருந்தது.15 வருடங்களுக்கு ஒருமுறை இயந்திரங்களை மாறற வேண்டும், அதற்கும் செலவாகும் என நடைமுறை சிக்கல்களை கூறியிருந்தது.

இவையெல்லாம் தாண்டி, 2034-ல் ஒரு நாடு ஒரு தேர்தல் சாத்தியமாகலாம் என பேசப்பட்டாலும், அதற்கான பாதை மோடி அரசாங்கத்திற்கு எளிதான ஒன்றாக இருக்கப்போது இல்லை என்றே அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்