இயக்குநர் சேரன் மீது புகார்.. ஆதாரமான வீடியோ.. ஒன்று சேர்ந்த ஓனர்கள்

x

சாதுவாகவே பார்த்து பழக்கப்பட்ட இயக்குநரும், நடிகருமான சேரன் திடீரென நடு ரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகின...

இயக்குநர் சேரனின் கோபத்திற்கு என்ன காரணம் ? நடு ரோட்டில் என்ன நடந்தது ? என சம்பவத்தின் பின்னணியை அலசிய போது தான் ஹாரனால் வந்த பிரச்சினை என தெரியவந்தது...

கடலூர் புதுச்சேரி சாலையில், இயக்குநர் சேரன் மற்றும் அவரது நண்பர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடத்தில் சேரன் காருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அதிக சத்தத்துடன் ஹாரன் எழுப்பியுள்ளார்.

பொறுத்து பொறுத்து பார்த்து எரிச்சலடைந்த இயக்குநர் சேரன், தனது காரை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நீண்ட நேரம் வாக்குவாதம் நீடிக்க, அந்த சாலையே பரபரப்பானது..

கோபத்தில் கொந்தளித்த சேரன், பின்னர் மீண்டும் அவர் காரிலேயே ஏறிச் சென்று விட்டார். அத்துடன் இவ்விவகாரம் முடிந்துவிடவில்லை. சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது..

இது மட்டுமன்றி, கடலூரில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் ஒவ்வொரு பேருந்துக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்..

இந்நிலையில் இவ்விவகாரம் இன்னும் பூதாகரமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், கடலூர் காவல்துறையில் சேரன் மீது புகாரளித்துள்ளனர்.

பயணிகளுடன் வந்த பேருந்தை இயக்குநர் சேரன் நடுவழியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு என்றும் அவர் காவல்துறையிலோ அல்லது போக்குவரத்து துறையிலோ புகாரளித்திருக்க வேண்டும் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் தாமாக சட்டத்தை கையில் எடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கள் வழக்குக்கு வலு சேர்க்கும் விதமாக, சம்பவத்தின் போது பேருந்தில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்..

அத்துடன் தனியார் பேருந்துகளில் தற்போது பயன்படுத்துவது எலெக்ட்ரிக் ஹாரன் என்றும் ஏர் ஹாரன் இல்லையென்றும் விளக்கமளித்துள்ள தனியார் பேருந்து சங்கத்தினர், பேருந்துகள் மீது அபராதம் விதிப்பதை போலீசார் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை கடலூர் மாவட்ட காவல்துறைக்கு வழங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்