திண்டுக்கல்லில் நின்ற வந்தே பாரத் - அடுத்த சில நிமிடங்களில் பதறிய பயணிகள்... இதுவரை நடக்காத சம்பவம்
திண்டுக்கல்லில் வந்து நின்ற வந்தே பாரத் - அடுத்த சில நிமிடங்களில் பதறிய பயணிகள்... இதுவரை நடக்காத சம்பவம்
வந்தே பாரத் ரயிலில் கதவுகள் திறக்காததால், திண்டுக்கல் பயணிகள் கொடை ரோட்டில் இறக்கி விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது... என்ன நடந்தது... பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்...
அதிவேக பயணத்திற்காக அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களிடையே இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயிலின் கதவில் ஏற்பட்ட கோளாறால், திண்டுக்கல் பயணிகள் திணறிய சம்பவம் அரங்கேறியுள்ளது..
நேற்று சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு, பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில், இரவு 7.46 மணியளவில் திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றடைந்தது.
திண்டுக்கல் பயணிகள் இறங்க தயாராக இருந்த நிலையில், பெட்டியின் கதவுகள் திறக்காததால் பயணிகள் இறங்க முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறிது நேரத்தில் ரயிலும் புறப்பட்டு விட்டதால் 12 பயணிகளும் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.
பின்பு வந்த ரயில்வே அதிகாரிகள், கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதாகவும், அங்கிருந்து வேறொரு ரயிலில் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்க உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது...
சொன்னது போலவே கொடைரோட்டில் 12 பயணிகளையும் இறக்கிய அதிகாரிகள், தூத்துக்குடியில் இருந்து மைசூர் சென்ற ரயிலில் அவர்களை ஏற்றி திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமானது முதலே கல்வீச்சு தாக்குதல், மாடுகள் மீது மோதி சேதமடைதல், உணவு சுகாதாரமின்மை என பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.
இப்போது கதவுகள் திறக்காமல் பயணிகள் பரிதவித்த சம்பவம், வந்தே பாரத் ரயிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில், ரயில்வே நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது...