சரக்கு வாகனத்தை தாறுமாறாக ஓட்டி போலீசார் பைக்கை பறக்கவிட்ட போதை ஆசாமி... வெளியான அதிர்ச்சி வீடியோ

x

சின்னாளப்பட்டியை அடுத்த பெருமாள் கோவில்பட்டியில் சின்னாளப்பட்டி போலீஸ் எஸ்.ஐ. சேகர் உள்பட 5 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருதுபாண்டி என்பவர் மது போதையில் சரக்கு வாகனத்தில் வந்தபோது, அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். சிறிது நேரம் கழித்து அதிவேகமாக சரக்கு வாகனத்தில் வந்த அவர், போலீசார் தடுத்து நிறுத்தியபோதும் நிற்காமல் வந்து, போலீசாரின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதினார். இதில் போலீசாரின் இருசக்கர வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதுன், அவர்கள் மரண பயத்துடன் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அந்த வாகனம், மின் கம்பத்தின் மீது மோதி நின்றதையடுத்து, சுதாரித்து எழுந்து வந்த போலீசார், மருதுபாண்டியை விசாரித்தனர். அப்போது அவருக்கு ஆதரவாக வந்த அவருடைய தம்பி பால்பாண்டி போலீசாருடன் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து, 2 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 காவலர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், போலீசார் மீது வாகனம் மோதிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்