அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு - நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
சேலத்தை சேர்ந்த செங்கோட கவுண்டர் மற்றும் பெருமாள் கவுண்டர் ஆகியோர் குமாரம்பட்டி கிராமத்தில் உள்ள தங்களின் நிலத்துடன், அருகில் இருந்த சுமார் 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அந்த நிலத்தை வீட்டுமனை இல்லாத குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தில் குடிசை அமைத்து சமைத்து சாப்பிட்டு நூதனமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர், நிலத்தை முறையாக அளவீடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இருப்பினும் நிலத்தை கைப்பற்றி மக்களுக்கு கொடுத்தால் மட்டுமே குடிசைகளை அப்புறப்படுத்துவோம் என மக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.