மகளுக்கு பிறந்த பேரக்குழந்தையால் தன் உயிருக்கே ஆபத்து என நினைத்த தாத்தா செய்த கொடூரம்
மகளுக்கு பிறந்த பேரக்குழந்தையால் தன்
உயிருக்கே ஆபத்து என நினைத்த தாத்தா
38 நாட்கள் கழித்து அரங்கேறிய கொடூரம்
பிறந்து 38 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை, மூட நம்பிக்கையால் நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அன்று வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது பிறந்து 38 நாளே ஆன ஒரு பிஞ்சு குழந்தை தண்ணீர் டிரம்முக்குள் மூழ்கி மூ மூர்ச்சையாகிவிட்டதாக தூக்கி வந்திருக்கிறார்கள்.
மருத்துவர்கள் அந்த குழந்தையை சோதித்து பார்த்துவிட்டு, ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.
38 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை தானாக தண்ணீர் டிரம்முக்குள் விழுந்து இறந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் நடந்தது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
உடனே அங்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை உடற்கூறாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த வீடு ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதிக்கு சொந்தமானது. இவர்களின் மகள் சங்கீதா. ஒன்னரை வருடங்களுக்கு முன் கும்பகோணம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.
6.5.24 அன்று சங்கீதாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சாத்வீக் என்று அந்த குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். சங்கீத பெற்றோர் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இந்த சூழலில் தான் மூன்று நாட்களுக்கு முன் தூங்கி கொண்டிருந்த சாத்வீக்கை திடீரென காணவில்லை. வீடு முழுவதும் தேடிபார்த்திருக்கிறார்கள். கடைசியில் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் சாத்வீக் மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். உடனே மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்ற போது தான் இறந்து போனது உறுதியாகிறது.
நடந்தது கொலை தான் என்று முடிவு செய்த போலீசார் குழந்தையின் தாய், தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். வீரமுத்துவின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்திருக்கிறது. இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் தான் ஜோதிடத்தை நம்பி பிஞ்சு குழந்தையை கொன்ற பயங்கரம் தெரியவந்திருக்கிறது.
வீரமுத்து ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். சங்கீதாவுக்கு குழந்தை பிறந்தவுடன் ஜோதிடம் பார்த்திருக்கிறார். வீரமுத்துவுக்கு ஆண் வாரிசு இல்லை. சங்கீதாவின் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்திருப்பதால் வீரமுத்துவின் உயிருக்கு ஆபத்து என்றும் குடும்பத்துக்கு அதனால் தீய விஷயங்கள் நடக்கும் என்றும் ஜோசியத்தில் கூறியிருக்கிறார்கள். அதை வீரமுத்து அப்படியே நம்பியிருக்கிறார். தன்னையும் குடும்பத்தையும் காத்துக் கொள்ள அந்த பிஞ்சு குழந்தையின் உயிரை காவு வாங்க வீரமுத்து முடிவு செய்திருக்கிறார்.
சம்பவத்தன்று அதிகாலை சங்கீதாவுடன் தூங்கி கொண்டிருந்த பிஞ்சு குழந்தையை அப்படியே தூக்கி சென்று தண்ணீர் பேரலுக்குள் மூழ்கடித்து கொன்று விட்டு எதுவும் தெரியாதது போல இருந்திருக்கிறார்.
மருத்துவமனையில் தொடங்கி போலீசாரின் விசாரணை வரை வீரமுத்து கூடவே சுற்றி திரிந்திருக்கிறார். ஆனால் அவரின் வேஷம் இறுதியில் வெளுத்துவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வீரமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இன்றைய நவீன யுகத்திலும் மக்கள் மனதில் மூடநம்பிக்கை என்ற நஞ்சு எந்த அளவுக்கு ஆழமாக கலந்திருக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.