தமிழகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ்.. கொட்டும் பணியில் ஊர்வலம் சென்று கொண்டாட்டம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. முதலில் உலக நன்மைக்காக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறந்தது அறிவிக்கப்பட்டது. பின்னர் கிறிஸ்துமஸ் குடிலில் இருந்த குழந்தை ஏசுவின் உருவ பொம்மை எடுத்து வரப்பட்டு, அந்த பொம்மைக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் இயேசு பிறப்பை வரவேற்று சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. புகழ்பெற்ற தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயம், ஜென்மராக்கினி தேவாலயம், புனித மேரி தேவாலயம், புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், லூர்து அன்னை ஆலயங்களில் வெளிநாட்டவர், வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் திரளானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். இயேசு பிறந்ததை பிரதிபலிக்கும் குடிலுக்கு சென்று பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள், பின்னர், சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் தேவாலய சிறப்பு திருப்பலியில் பங்கேற்று, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.