இரண்டரை வயது ஆண் குழந்தையை அடித்து சித்ரவதை செய்த தந்தை

x

செங்கல்பட்டு மேட்டுத் தெருவில் இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு சொந்த தந்தையால் நடந்திருக்கும் துயரம் யாருக்கும் நடக்க கூடாத சம்பவம்...

இந்த பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் கார்த்திகேயன். 34 வயதான இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஆரம்பத்தில் நன்றாக போன இவர்களது வாழ்க்கையில், கார்த்திகேயனின் மது குடிக்கும் பழக்கம்.. வேலைக்கு செல்லாமல் பொறுப்பில்லாமல் சுற்றியது உள்ளிட்ட பல காரணங்களால், கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நாளடைவில், கார்த்திகேயனின் மனைவியின் பார்வை வேறொரு ஆண் மீது திரும்பவே, தனது குழந்தையோடு வந்தவாசியில் அவர் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செங்கல்பட்டில் தனது மாமியார் வீட்டில் கடந்த மாதம் தங்களது ஆண் குழந்தையை அப்பெண் விட்டுவிட்டு வந்தவாசிக்கு மீண்டும் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், தனது மனைவி மீது இருந்த வெறுப்பை காட்டும் விதமாக, கார்த்திக் தனது இரண்டரை வயது குழந்தையை வீட்டில் அடைத்து வைத்து தலையில் ஓங்கி அடிப்பது, கழுத்தை நெறிப்பது என்றெல்லாம் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து வந்திருக்கிறார்.

இதனால், பல நாட்களாக, தாயைப் பிரிந்த குழந்தை, தந்தையின் கோரப்பிடியில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறது.

இதனை போனில் வீடியோவாக பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பியும் இருக்கிறார். பிறகு இதைக்கண்டு குழந்தையின் தாயார் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது குறித்து அவர், CHILD LINE 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு வீடியோ ஆதாரங்களோடு புகாரளித்துள்ளார்.


தொடர்ந்து, செங்கல்பட்டு குழந்தைகள் நல குழுமத்திற்கு இந்த தகவல் கிடைத்தது. உடனடியாக, போலீசார் உதவியோடு சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று அந்த சிறுமியை மீட்டனர்.

மேலும், இது தொடர்பாக குழந்தைகள் நல குழும ஒருங்கிணைப்பாளர் சங்கமித்ரா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், ஆண் குழந்தையை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின்பு, தற்போது முகாமில் கொண்டுபோய் குழந்தையை பாதுகாப்பாக சேர்த்துள்ளனர்.

இதனிடையே, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், விஷத்தைக் குடித்து விட்டதாக நாடகமாடிய கார்த்திகேயன், மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, தலைமறைவான கார்த்திக்கை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்