கண்டம் துண்டமாக ரத்த வெள்ளத்தில் ரவுடி மருமகன்.. செய்த வினையெல்லாம் காத்திருந்து கருவறுத்த பயங்கரம்

x

“அம்மா வரம்மா... அண்ணா வரன்னா... பாத்து பத்ரமா இருங்க“ என சோகமான முகத்துடன் பாசமாக டாட்டா காட்டும் இவர்களை பார்த்து ஏதோ விடுமுறை முடிந்து சென்னைக்கு போகும் பொறுப்பான பிள்ளைகள் என்று நினைத்து விடவேண்டாம்...

மாமியார் வீட்டிற்கு வந்த மருமகனை கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்து விட்டு சிறைக்கு செல்லும் ஜெயில் பறவைகள்...

இவர்களின் தோரணையிலேயே இது பல நாள் திட்டமிட்டு செய்த படுகொலை என்று அப்பட்டமாக தெரிகிறது...

கொல்லப்பட்டவர் நவீன்... 24 வயதான இவர் அம்பத்துார், மாடம்பாக்கம், சித்தாலட்சுமி நகரைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

நவீன் ஒரு பிரபல ரவுடி.... வயதுக்கு மீறிய வழக்கை வாங்கி வைத்திருக்கும் அரசாங்க பிள்ளை... அந்த அளவிற்கு இவரின் கிரைம் ரேட் எக்கச்சக்கம்.

ஏரியாவில் லொட்ட நவீன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்...

சமீபத்தில் தான், ஒரு கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் வந்திருக்கிறார் நவீன். சம்பவத்தன்று அம்பத்தூர், முத்தமிழ் நகர் முதல் தெருவில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற நவீன், வெளியே நின்று போன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், நவீனை சுத்து போட்டு சரமாரியாக வெட்டிச்சரித்திருக்கிறது. நடந்த கொடூர தாக்குதலில் நிலை குலைந்த நவீனை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனால் அங்கே நவீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போயிருக்கிறார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

தீவிர விசாரணையில் நவீனை கொன்ற ராஜேஷ் குமார், அசோக்,ஆல்பர்ட், விஜய், இமான், எழுமலை, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில் நடந்திருப்பது பழிக்கு பழி கொலை என தெரிய வந்திருக்கிறது.

கடந்த 4 வருடத்தில் இது ஐந்தாவது கொலை....

இந்த ரிவெஞ்ச் கொலைகளின் தொடக்கவுரை கடந்த 2021 ஆம் ஆண்டு ஐ.சி எப்.ல் வைத்து கருணாகரன் என்ற ரவுடியின் ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது.

கருணாகரன் ஒரு சரித்திரபதிவேடு குற்றவாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அலெக்ஸ் என்பவரின் உறவினர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ், 20 வயதில் தனது சகாக்களுடன் சென்று கருணாகரனை கொடூரமாக வெட்டிக்கொலை செய்திருக்கிறார்.

இந்த வழக்கில் அலெக்ஸ் உட்பட 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருணாகரனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த அவரது நண்பர்கள், அதே வருடத்தில் அலெக்ஸை ஓடஓட வெட்டி கொலை செய்தனர்.

இந்த வழக்கிலும் போலீசார் ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் ஒருவர் தான் பின்னாளில் வில்லிவாக்கத்தில் மிகப்பெரும் ரவுடியாக உருவெடுத்த ரஞ்சித் என்கிற டபுள் ரஞ்சித்.

ரவுடியாக ஃபார்மான பிறகு ரஞ்சித் அன்ட் கோ ஏரியாவில் நடந்த ஒரு பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுனர் மதனை வெட்டிக்கொலை செய்திருக்கிறது.

நண்பனை கொன்று விட்டு ஏரியாவில் டானாக சுற்றித்திரியும் ரஞ்சித்தை தீர்த்து கட்ட அலெக்ஸின் கூட்டாளிகள் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ரஞ்சித்தை ரூட்டெடுத்து போட்டுத்தள்ளி அறைக்கூவல் விடுத்திருக்கிறது அலெக்ஸ் கேங். அந்த கேங்கில் ஒருவர் தான் உதயகுமார். ரஞ்சித்தை ரூட்டெடுக்க ஸ்கெட்ச் போட்டு கொடுத்தவர்.

இதனால் டபுள் ரஞ்சித்தின் கொலைக்கு பழிவாங்க அவரது கூட்டாளிகள் சாலையோரத்தில் நண்பர்களுடன் மதுகுடித்துக்கொண்டிருந்த உதயகுமாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலையில் முக்கியக்குற்றவாளி தான் தற்போது கொல்லப்பட்ட ரவுடி நவீன். இவர் ரஞ்சித்துடன் சேர்ந்து பல கொலைகளை செய்ததாக சொல்லப்படுகிறது. அலெக்ஸ் கொலையிலும், ஆட்டோ ஓட்டுனர் மதன் கொலையிலும் நவீன் டபுள் ரஞ்சித்துக்கு பக்கபலமாக நின்று சம்பவம் செய்திருக்கிறார்

இப்படி அலெக்ஸ், உதயகுமார் உட்பட மூன்று கொலைகளில் முக்கிய குற்றவாளியான நவீனை, அலெக்ஸ் தரப்பை சேர்ந்த 6 பேரும் ஸ்கெட்ச் போட்டு பிசிறு தட்டாமல் கதையை முடித்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

விசாரணை முடிவில் ராஜேஷ் குமார்,அசோக்,ஆல்பர்ட், விஜய், இமான், எழுமலை, ஆகிய 6 பேரை அம்பத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த கொலையின் தொடர்ச்சியாக அலெக்ஸ் வீடு என நினைத்து அவரின் சித்தப்பா வீட்டில் பெட்ரோல் பாம் வீசப்பட்டிருக்கிறது. அந்த நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிறிய தகராறில் தொடங்கிய கொலை, ரத்த ஆறாக ஓடி 6 பேரை காவு வாங்கி இருக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த கேங் வாரில் கொல்லப்பட்டவர்கள், கொலை செய்தவர்கள் என யாருமே 25 வயதை கூட தாண்டாதவர்கள்... வாழ்க்கையை துவங்குவதற்குள்ளேயே இவர்களின் மனதில் ரவுடி போதை துளிர்விட்டு மரணக்குழிக்குள் தள்ளி விடுகிறது.

இப்படி மாறி மாறி ரவுடிகளின் ரத்தத்தால் எழுதப்படும் பழிக்கு பழி கொலைகளுக்கு முடிவுரை போலீசார் எழுத வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்