பகுதி நேர ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல் | Chennai
முதல்வர் தலைமையிலான ஆலோசனையில், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று,தகவல்கள் வெளியாகி உள்ளன.
பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர் அதிகாரிகளோடு முதல்வர் இன்று விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்,ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை அடுத்த கட்ட போட்டி தேர்வு இல்லாமல் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்த நிலையில், அது தொடர்பாகவும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 803 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பார்க்கப்பட்டு தேர்வு பட்டியல் தயாராக உள்ள நிலையில், அவர்களை மட்டும் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.