தி.நகரில் போலீசாரால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் - உறுதியான உண்மை.. அச்சத்தில் சென்னை வாசிகள்

x

சென்னையில், இரு காவலர்களால் அரங்கேற்றப்பட்டிருக்கும் பணப்பறிப்புச் சம்பவம், சென்னைவாசிகளை கதி கலங்கச் செய்திருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சித்திக்... தயிர் வியாபாரியான இவர், கடந்த 9 ஆம் தேதி சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்மில் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய வந்திருக்கிறார்....

அப்போது, கையில் வாக்கி டாக்கியுடன் அங்கு நின்று கொண்டிருந்த காவலர் ஒருவர், சித்திக்கை அழைத்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த நிலையில், அவர் கையில் வைத்திருக்கும் பணத்தின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி பறித்துச் சென்றிருக்கிறார்...

கணப்பொழுதில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளாகி குழப்பத்தில் இருந்த சித்திக் இது குறித்து கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்....

முதலில், சித்திக்கிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது காவலர் தானா என சந்தேகம் கொண்டு, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், சித்திக்கிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட நபர் போக்குவரத்து காவலர் உடையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்...

விசாரணையில், பணப்பறிப்பில் ஈடுபட்டது ஐ.சி.எஃப் காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராமமூர்த்தி என்பதை போலீசார் கண்டுபிடித்த நிலையில் , அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

வேலியே பயிரை மேய்ந்த கதையாய், காவலரின் இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதே போல் கடந்த 7 ஆம் தேதி சென்னை. தி.நகரில் ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது...

ஜி.என்.செட்டி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்மில் இதே சம்பவம் அரங்கேறியிருக்கிறது...

கார்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அர்ஷத் என்ற இளைஞர் தன் உரிமையாளர் சொன்னதின் பேரில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏ.டி.எம்மில் டெபாசிட் செய்ய வந்திருக்கிறார்...

கீழ்பாக்கம் சம்பவத்தை போலவே அங்கு போலீஸ் சீருடையில் நின்று கொண்டிருந்த காவலர் ஒருவர், அர்ஷத்தை அழைத்து கையில் இருப்பது ஹவாலா பணமா? எனக்கூறி கிடுக்குப்பிடி கேள்விகளை தொடுத்த நிலையில், இளைஞரை மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றிருக்கிறார்...

உடனே, தனது உரிமையாளருக்கு அர்ஷத் தகவல் தெரிவித்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது... விசாரணையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் ராகுல் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவர அவரை பணியிடை நீக்கம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

சாமானிய மக்களின் அரணாண.... போலீசாராலேயே அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்த இரு சம்பவங்கள், சென்னைவாசிகளை கதி கலங்கச் செய்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்