``எனக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைங்க'' - தாயிடம் கேட்ட நொடியே சென்னை போலீஸ்க்கு வந்த எதிர்பாரா மரணம்

x

சென்னை கே.கே நகர் இரண்டாவது செக்டார் எட்டாவது தெருவில் தான், இந்த சோகம் அரங்கேறி உள்ளது. செம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றிய செல்வகுமரன் என்பவர் தான், இதில் உயிரிழந்திருக்கிறார்..

30 வயதான செல்வகுமரன் என்பவர், தனது தாய் மற்றும் மின்சாரத்துறையில் உதவி பொறியாளராக உள்ள தனது அண்ணன் பெருமாள், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள தனது அண்ணன் மனைவி தனலட்சுமி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

இவருக்கு இன்னும் திருமணம் கைகூடாமலே இருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சூழலில், தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி, செல்வகுமரன் வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சம்பவத்தன்று இரவில் பயங்கரமான மதுபோதையில் வீட்டிற்கு வந்திருந்த செல்வகுமரனைக் கண்டு வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு, வழக்கம்போல, தனது தாய் மற்றும் அண்ணன் பெருமாளுடன் தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி, ஆபாசமாக திட்டியதோடு சண்டையும் போட்டுள்ளார். ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றவே, அண்ணன் பெருமாளை தனி அறைக்குள் அடைத்து வைத்த செல்வகுமரன், தனது தாயாருடன் சண்டை போட்டபடியே, வீட்டில் அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்திருக்கிறார்.

இதனால், பயத்தில் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளிக்கவே, கே.கே.நகர் போலீசாரும் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். இதை அறிந்து தப்பிக்கப் போன அவர், போதையில் செய்வதறியாமல், வீட்டின் மாடியில் இருந்த ஒரு அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே தாவிய போது தான், இந்த சோகம் அரங்கேறி உள்ளது..

கண்ணாடியை உடைத்துக் கொண்டு தாவிய செல்வகுமரன், சுவர் மீது நடந்து போய், வெளியே தாவியபோது, கேட் கம்பிகளின் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே காவலர் செல்வகுமரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, செல்வகுமரனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கே.கே.நகர் போலீசார், தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்