"10 வருஷமா இடிக்க சொல்றோம்...இன்னும் எத்தனை உயிரை பலி கொடுப்பீங்க" -சென்னையை உலுக்கிய இளைஞரின் மரணம்
"10 வருஷமா இடிக்க சொல்றோம்...இன்னும் எத்தனை உயிரை பலி கொடுப்பீங்க" சென்னையை உலுக்கிய இளைஞரின் மரணம்..வயிறு எரியுது... தலையில் அடித்து கதறும் உறவினர்கள்... - மனதை நோகடிக்கும் காட்சிகள்
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பால்கனி சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சையது குலாம் என்பவர், நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் நான்காவது தளத்தில் இருந்த பால்கனி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டிடங்களை உடனடியாக இடித்து அதே பகுதியில் புது கட்டிடம் கட்டித் தர வேண்டும், பலியான இளைஞர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள், லூப் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லூப் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்ட நிலையில், சாந்தோம் நெடுஞ்சாலையிலும் போராட்டம் நடைபெற்றது. இரும்பு தடுப்புகள் மற்றும் கற்களை சாலையின் குறுக்கே போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் வேலு, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.