சென்னை பாரீஸில் அதிர்ந்த பூமி.. நிலநடுக்கம் போல உணர்ந்த மக்கள்.. யோசிப்பதற்குள் 3 பேருக்கு சோகம்
சென்னை பாரிமுனை அருகே, சாலையில் நடந்த சென்றவர் மீது 60 ஆண்டு பழமையான கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நபர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முழுப் பின்னணியையும் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
காமராஜர் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்ட 60 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில்தான் இந்த விபரீதம்..
கட்டடத்தை இடிக்கும் போது ஏற்பட்ட திடீர் விபத்து சென்னை, பாரிமுனை பகுதியை பரபரப்பாக்கி இருக்கிறது..
பிராட்வே பேருந்து நிலையம் எதிரே... சென்னை மருத்துவ கல்லூரியின் முதுகலை மாணவர்கள் விடுதியாக செயல்பட்டு வந்த இந்த கட்டடத்தை இடிக்க இரு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது...
4.24 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட உத்தரவிடப்பட்ட நிலையில், அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன..
இந்நிலையில், கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து, சாலையில் சென்றவர் உட்பட மூவர் காயமடைந்த சம்பவம் மக்களை கதிகலங்க செய்திருக்கிறது...
கட்டடத்தை இடிக்கும்போது, தரையெல்லாம் அதிர்ந்தது தங்களை பயமுறுத்தியதாகவும், இதனால் தாங்கள் எச்சரிக்கையுடன் இருந்தும் இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறும் குடியிருப்பு வாசிகள், முறையான எச்சரிக்கை பலகைகளை வைக்காதது ஏன் என மனக்குமுறலை கொட்டி இருக்கின்றனர்
மக்கள் நடமாட்டமும், சாலை போக்குவரத்தும் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்த பிராட்வே பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், விஸ்வநாதன், சொக்கலிங்கம் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய மூவர் காயமடைந்திருக்கின்றனர்...
சம்பவ இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு , இடிபாடுகளை உடனடியாக அகற்ற அறிவுறுத்திய நிலையில், எச்சரிக்கை பலகைகள் வைக்காதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது...
மேலும், விபத்து நடந்த உடனே காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக மறுத்தார்...