நம்பி வந்தவருக்கு நேர்ந்த பயங்கரம்... அதிர்ந்த சென்னை... பெண் உட்பட சிக்கிய கும்பல்
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பைனான்சியரான துரை ரகுபதி தனது மாருதி காரை அடமானத்திற்கு கொடுப்பதாக ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்து தொடர்பு கொண்ட குன்றத்தூரைச் சேர்ந்த கெளதம் காரை எடுத்துக் கொண்டு கோயம்பேடுக்கு வருமாறு தெரிவித்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டிற்கு வந்த துரை ரகுபதியை கெளதம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியதுடன், கார் மற்றும் ஐபோனை பறித்துச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய நிலையில் கௌதம், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அவரது பெண் தோழி ஸ்வேதா, கோயம்பேடைச் சேர்ந்த நாகராஜன், அண்ணா நகரைச் சேர்ந்த கிஷோர் பாலாஜி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் ஐபோன் மீட்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.