ஹீரோவாக நினைத்த போலீசா இந்த காரியத்தை செய்தது - சென்னை திருவல்லிக்கேணியில் அரங்கேறிய பகீர்
ஹவாலா பணத்துடன் சிக்குபவர்களைக் குறிவைத்து, மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் சிக்கியது எப்படி? பார்க்கலாம்..விரிவாக..
வேலியே பயிரை அழிப்பதைப் போல, சென்னையில் தான், இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. 15 லட்சம் ஹவாலா பணத்தைப் பறித்து சென்ற வழக்கில், வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவில் வசிப்பவர் முகமது கவுஸ். இவர் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜூனைத் அகமது என்பவரிடம் வேலை செய்து வந்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி, புதிய சிடி ஸ்கேன் மிஷின் வாங்க வேண்டும் எனக் கூறி, 20 லட்சம் பணத்தை ஜுனைத் அகமது, முகமது கவுஸிடம் கொடுத்திருக்கிறார்.
பிறகு பணத்துடன் வாணியம்பாடியில் இருந்து, சென்னை வந்த முகமது கவுஸிடம், டிசம்பர் 16ஆம் தேதி போனில் பேசிய ஜூனைத் அகமது, திருவல்லிக்கேணியில் வசிக்கும் ஹரீஷ் என்பவரிடம் இருந்து வரவேண்டிய, 10 லட்சம் பணத்தை வாங்கிக் கொள் எனக் கூறியுள்ளார்.
இதற்காக, பைக்கில் பணத்துடன் திருவல்லிக்கேணி சென்ற முகமது கவுஸை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே, சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், 20 லட்சம் ரூபாய் பணம் இருப்பதைப் பார்த்துள்ளார்.
அப்போது, 3 பேரை போனில் அழைக்கவே, டிப்டாப் உடையில் வந்த 3 பேர், தங்களை வருமான வரித்துறையினர் எனக் கூறிக் கொண்டு தங்களோடு, வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வரணும் என முகமது கவுஸை காரில் ஏற்றிச் சென்றனர்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே சென்றபோது, 'இது ஹவாலாப்பணம், புகார் கொடுத்தால் நீதான் சிறைக்கு செல்வாய் என கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு, முகமது கவுஸை விரட்டி விட்டுள்ளனர். இதையடுத்து நடந்த சம்பவத்தை, ஜூனைத் அகமதுவிடம் முகமது கவுஸ் கூறவே, அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பணத்திற்கான ஆவணங்கள் எங்கே? என்பது ஒருபுறமிருக்க இது குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் என்பவர் தான் சோதனை நடத்தி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.
ராஜா சிங்கிடம் நடத்திய விசாரணையில், பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தான், ஒப்படைத்ததாகவும், தனக்கும் இந்த வழிப்பறிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். ஆனால், சிக்கிய ஹவாலா பணம் குறித்து முறைப்படி, திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கோ, உதவி ஆணையருக்கோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை அவர் தெரிவிக்காததால், அவர் மீது 'கூட்டு வழிப்பறி' என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட ஹவாலா பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் பெற்றது தெரியவர, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வந்து இருந்தவர்கள் வருமான வரித்துறை சூப்பிரண்டு பிரபு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன், அதிகாரி பிரதீப் ஆகியோர் தான் என்பது தெரியவந்தது.
பிறகு, திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார், 3 வருமான வரித்துறை அதிகாரிகளையும் கைது செய்தனர். விசாரணையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங், ஹவாலா பணம் ஏதும் சிக்கினால், இந்த 3 பேரின் உதவியோடு, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், மிரட்டி பறித்துவிட்டு பங்கிட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன்படியே, கடந்த 10 நாட்களுக்குள் வாகன சோதனையில் சிக்கிய 35 லட்ச ரூபாயை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்காமலேயே, வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன் மோசடி செய்த அதிர்ச்சிகர தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், வருமான வரித்துறையின் துணை இயக்குநர் கேசவன், வருமானவரித்துறை அதிகாரிகளிடம் செய்யும் விசாரணைக்கு வருமானவரித்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் எனக்கூறி உள்ளார். இதேபோல, சென்னை நேப்பியர் பாலம் அருகே சிக்கிய 40 லட்சம் பணத்தில், 25 லட்சத்தை எடுத்துக் கொண்டு, 15 லட்சத்தை மட்டும், பணம் கொண்டுவந்த நபரிடமே திருப்பி கொடுத்ததும் விசாரணையில், தெரிய வந்துள்ளது.
பாரிமுனையில் தொழில் தொடங்குவதற்காக நகைகளை அடகுவைத்தும், நண்பர்கள் மூலம் பெற்ற 19 லட்சம் ரூபாயில், 10 லட்சத்தை பறித்துவிட்டு, மீதமுள்ள 9 லட்சத்தை மட்டும் திருப்பி அளித்தது. அப்ரோஸ் என்பவரிடம் இருந்து 25 லட்சம், யாசர் அராபத் என்பவரிடம் இருந்து 10 லட்சம் என இதன் பட்டியல் நீள்கிறது...
இதனிடையே, ஹவாலா பணத்தில், 15 லட்சத்தை வைத்துக் கொண்டே மொத்தப் பணமுமே போனதாக பொய் புகார் அளித்த முகமது கவுஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் சட்ட ஆலோசனை நடந்து வருகிறது.
ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோருக்கு டிசம்பர் 31 வரை நீதிமன்றக்காவலில் வைக்க சைதாப்பேட்டை மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, சைதாபேட்டை கிளைச்சிறையில் 4 பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் வருமானவரித்துறை உயரதிகாரிகள் 3 பேர், தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தி டிவி செய்திகளுக்காக, சென்னை செய்தியாளர்கள் சசிதரன் மற்றும் சாலமன்.