கால்டாக்ஸி டிரைவர் கண்ணில் மண்ணை தூவிய பெண்கள்.. கர்ப்பிணியும் கூட்டு.. சென்னையில் பரபரப்பு
கால் டாக்ஸி டிரைவரை நூதன முறையில் ஏமாற்றி தப்பியோடிய பெண்களை இரு சக்கரவாகனத்தில் சென்று ஓட்டுநர் துரத்தி பிடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கால்டாக்ஸி ஒட்டுநரான இவர், எழும்பூரில் சவாரிக்காக காத்திருந்துள்ளார். அப்போது... கையில் பணம் இல்லை எனவும், அவரசமாக கூடுவாஞ்சேரி செல்ல வேண்டும் எனவும் கூறி ஒரு கர்ப்பிணி உட்பட இரு பெண்கள் காரில் ஏறியுள்ளனர். தங்களிடம் போன் இல்லை எனக் கூறி பாலசுப்பிரமணியனின் போனை வாங்கிய பெண்கள், தங்களை பணக்காரர்கள் போல் காட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுவாஞ்சேரி சென்று பின்னர் அங்கிருந்து எழும்பூர் வந்திருக்கின்றனர். இறுதியாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கட்டணமாக ஓட்டுநர் கேட்ட நிலையில், பணத்தை வீட்டிலிருந்து எடுத்து வருவதாக கூறிய இருவரும் ஆட்டோவில் ஏறிச் தப்பிச் சென்றது ஓட்டுநரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. உடனே, அவ்வழியே பைக்கில் சென்ற ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு பெண் ஒருவரை துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறார். அப்பெண் மூலமே கர்ப்பிணி பெண்ணையும் போலீசார் பிடித்த நிலையில், போலீசாரிடம் இருவரும் கதறி அழுது மன்னிப்பு கேட்டிருக்கின்றனர். இந்நிலையில், அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி ஓட்டுநரிடம் ஒப்படைத்த போலீசார், பெண்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர்.