போதை பொருளை கட்டுப்படுத்தும் காவல்துறைக்கே கேமரா மாட்டிய சென்னை ஹைகோர்ட் | Chennai High Court |Drugs

x

தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் காவல் துறை நடவடிக்கையை மேற்பார்வையிட போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்ய கோரிய வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டிருந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அண்டைய மாநிலங்களில் இருந்து கொரியர் வாயிலாக போதைப் பொருள் நுழைகிறதே? என கேள்வி எழுப்பினர். மாவட்டம், தாலுகா அளவில் போதைப் பொருட்கள் சாதாரணமாக கிடைப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இதனை கட்டுப்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சட்ட பணிகள் ஆணையக் குழுவிற்கு உத்தரவிட்டனர்.

பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் எழுதுபொருள், தின்பண்ட கடைகள் தவிர்த்து, வேறு எந்த கடைகளும் அமைக்க கூடாது என்ற நீதிபதிகள், போதைப் பொருளை கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரையும், சிபிஐ அதிகாரி ஒருவரையும், அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்