ரத்த வெள்ளத்தில் நடந்த பிரசவம்"பாத்ரூம் கழுவிட்டு டாக்டராக மாறிய ஆயா"நரக வேதனையில் துடிதுடித்த மனைவி
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில், மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி, மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
கல்பாக்கம் அடுத்த வயலூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் - சுஜாதா தம்பதியருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குப்பின் பிரசவத்திற்காக சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சுஜாதா அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மருத்துவர் இல்லாத நிலையில், இரவில் இரண்டு செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் இணைந்து பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுஜாதாவிற்கு அதிக மூச்சு திணறல் ஏற்படவே பதற்றம் அடைந்த செவிலியர்கள், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் சோதித்துப் பார்த்ததில், குழந்தை ஏற்கனவே வயிற்றில் இறந்துள்ளதாகவும், அப்படியே சென்றால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். உடனடியாக சுஜாதாவிற்கு பிரசவம் பார்க்கப்பட்டு, இறந்த நிலையில் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இந்நிலையில், சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையை பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனை முன்பு மண்டியிட்டு கதறி அழுதனர்.