உள்ளேயே கருப்பு ஆடு.. லீக்கான ரகசிய தகவல்கள்.. அதிர்ச்சியில் சென்னை மாநகர காவல்துறை

x

போதை பொருள் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு திசைமாறிய போலீசாரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஒரு பக்கம் போதைப் பொருளை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தவர்களுக்கு தங்களுடன் பணிபுரியும் கருப்பு ஆடும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

சென்னையில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்க சென்னை போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகப் போதை கும்பலை தெற்கு மண்டல அதிதீவிர தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்..

ஒரு மாதத்திற்கு முன்பாக போதைப் பொருள் கும்பல் ஒன்றை அமைந்தகரையில் கைது செய்தனர்.விசாரணையில் இந்த கும்பல் சிலந்தி வலை போன்று மிகப் பெரிய நெட்வொர்க்கில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தான் முன்னாள் டிஜிபியின் மகன், நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என இருபதுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். லீடுக்கு மேல் லீடு என விசாரணை சென்று கொண்டிருந்த நிலையில் போலீசாரும் விடாமல் துரத்தினர்.

சென்னையில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்த ரகு என்பவர் கைது செய்யப்பட, அவருக்குப் போதைப் பொருளை வழங்கி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி கண்ணனைக் கைது செய்தனர்.

தொடர்ந்து கண்ணனின் செல்போனை வைத்து தீரன் அதிகாரம் படப் பாணியில் பெங்களூரில் பல நாட்கள் காத்திருந்து போதைப் பொருள் கும்பலின் தலைவனான கேமரூன் நாட்டை சேர்ந்த ஜானதன் என்பவரையும் கைது செய்தனர் அதிதீவிர தடுப்பு பிரிவு போலீசார்.

ஆனாலும் ஏதோ பொறி தட்ட மீண்டும் கண்ணனின் போனை தீவிரமாகச் சோதனை செய்தனர். அதிலிருந்த ஒரு எண் தான் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அயனாவரம் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வரும் பரணி என்பவர் கண்ணனுடன் அடிக்கடி பேசி வந்து இருப்பதும், ஜி பே மூலமாக இருவருக்கும் இடையே பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பரணியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 2016 ம் ஆண்டு காவல் பணிக்குத் தேர்வான பரணி நீலாங்கரை காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்து இருக்கிறார்.அப்போது குறுகிய காலத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பரணிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கிரிண்டர் செயலி மூலம் போதைப் பொருள் வியாபாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாகப் போதைப் பொருள் விற்பனையில் பரணி ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் சூழலில் இதன் பின்னணியில் இன்னும் என்னவெல்லாம் இருக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்