பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

x

கடந்த 2001ம் ஆண்டு வீட்டு மனை பட்டா இல்லாத ஏழைகளான பணக்காரன், வளர்மதி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வருவாய்த் துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப் பட்டது. அவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சலுகைகள் பெற மனு அளிப்பதற்காக இங்குள்ள பொதுமக்கள் முயன்ற போது மயிலத்தை சேர்ந்த ஆண்டாள் குமார் என்பவர் மூலம் போலியான ஆவணங்களை வைத்து பட்டா மாற்றம் செய்யப்பட்டு மயிலம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வெளியூர் நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பல முறை மனு அளித்துள்ளனர். அங்கு வசிக்கும் பணக்காரன் உள்ளிட்ட சிலருக்கு தவறான முறையில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட நபர்களிடமிருந்து நீதிமன்றம் மூலமாக நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பணக்காரன் செல்போன் டவரில் 5 லிட்டர் பெட்ரோல் கேனுடன் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உத்தரவாதம் அளித்ததால் மண்ணெண்ணெய் கேனுடன் அவர் கீழே இறங்கினார். இருப்பினும் அங்குள்ள பொதுமக்கள் தவறான முறையில் பட்டா மாற்றம் செய்துள்ள இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்