கட்டப்பையில் பறிபோன முதல் வாரிசு.. 2 கிலோ வெயிட்டு..5 நாள்ல பிணம்-நெஞ்சு எரிஞ்சி சாபம் விட்ட தாத்தா
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களேயான பச்சிளங்குழந்தையின் சடலத்தை கட்டைப்பையில் வைத்து எடுத்து செல்லும் அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணி என்ன ? பார்க்கலாம் விரிவாக...
தனது குடும்பத்தின் முதல் வாரிசை இழந்து விட்டதாக கதறும் காட்சிகளும்...கட்டப்பையில் பச்சிளங்குழந்தையின் சடலத்தை எடுத்து செல்லும் காட்சியும் காண்போர் மனதை ரணமாக்கியுள்ளது...
திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டபள்ளி பகுதியை சேர்ந்த தங்கராஜின் மனைவி ரம்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
மாதந்தோறும் முறையான செக்-அப் மேற்கொண்டு வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன் பிரசவத்திற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது...
குடும்பத்திற்கு முதல் வாரிசு வந்து விட்டதாக குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க...அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை...
பிறந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது..
இதையறிந்த உறவினர்கள், குழந்தையை பார்க்க சென்ற நிலையில், கட்டைப் பையில் குழந்தையின் சடலத்தை வைத்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர்...
கட்டைப்பையில் கொடுக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை கண்டு கொதித்து போன உறவினர்கள், ஆதங்கத்துடன் மருத்துவமனை ஊழியர்களை திட்டித்தீர்த்ததோடு, புலம்பியபடியே மருத்துவமனையை விட்டு வெளியேறியது காண்போரை கலங்கச் செய்தது...
இதுகுறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் விசாரிக்கையில் மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் ஏற்பட்ட பிரச்சனையில் குழந்தை மிகவும் உயிருக்கு போராடி வந்ததால், மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இறுதி வரை குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் இயன்றவரை சிகிச்சையளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை எனவும், இது தொடர்பாக பெற்றோரிடமும் தெரிவித்து விட்டோம் என கூறியதோடு, அவர்களே குழந்தையின் சடலத்தை கட்டைப் பையில் எடுத்து சென்றதாக கூறியுள்ளனர்.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்து வர, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்..