அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை, திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் உறுதியாகியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், மற்றொரு நபருடன் தொலைபேசியில் குற்றவாளி பேசியதாக மாணவி கூறிய நிலையில், அதற்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைலை ஏரோப்ளேன் முறையில் வைத்திருந்ததாக, காவல் ஆணையர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது என்று கூறியுள்ளார்.