அண்ணா யுனிவர்சிட்டியில் அன்று இரவு நடந்தது என்ன? மாணவியை துடிக்க விட்டு எடுத்த வீடியோ..ஷாக் தகவல்

x

சென்னை கிண்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் தனது காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த மாணவிக்கு தான், இந்த கொடூரம் நடந்துள்ளது.

இங்கு 4ஆம் ஆண்டு மாணவரும், 2ஆம் ஆண்டு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். டிசம்பர் 23ஆம் தேதி, இரவு தனியாக பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த 2 மர்ம நபர்கள், மாணவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவரின் கண்முன்னே அவற்றை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டும் வெளியில் கூறினால், வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவோம் எனவும் கூறி, மிரட்டியுள்ளனர்.

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்த மாணவர் மற்றும் மாணவியை ரகசிய இடத்தில் வைத்து மர்ம நபர்களின் அடையாளங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்..

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினர், பிற மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்தின் அடிப்படையில், ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணை நிறைவு பெற்ற பின்னர் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விசாரிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, உதவி ஆணையர் பாரதிதாசன் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மூன்று தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக, ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு மொத்தம் 4 தனிப்படையினர் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், விடுதிக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர்கள் உள்ளிட்டோரின் விவரங்களையும் சேகரித்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகு பாதிக்கப்பட்ட மாணவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தில், வெளி மாணவர்களோ அல்லது முன்னாள் மாணவர்களோ ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருக்கும் நிலையில், வெளியூரில் இருந்து விடுதிக்கு வந்த மாணவர்கள் யார்? அதேபோல, திங்கட்கிழமை இரவு நேரத்தில் விடுதியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் யார் யார்? என்ற பட்டியலை எடுத்து விசாரிக்க கூடிய பணியிலும் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, ஏற்கனவே ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்