அஞ்சான் ராஜூ பாயான அரசு பேருந்து ஓட்டுநர்..."வாடா மோதி பாத்துக்கலாம்" சீறிப்பாய்ந்த வீடியோ
தேனியில் பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே குறித்த நேரத்தில் பேருந்தை இயக்குவதில் ஏற்பட்ட தகராறில், அஞ்சான் ராஜூ பாயாக களத்தில் இறங்கி தனியார் பேருந்து ஓட்டுநரை அரசு பேருந்து ஓட்டுநர் சண்டைக்கு அழைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
தனியார் மற்றும் அரசு பேருந்து என இரு பேருந்து வசதிகளும் உள்ள நகரங்களில் பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே அடிக்கடி நடக்க கூடிய தகராறு...
இரு நிர்வாகங்களின் கீழ் இயங்கும் பேருந்துகளுக்கும் தங்கள் வழித்தடத்தில் இயங்குவதற்கென ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்...
இந்த நேரத்தை பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்றாமல் தவறும் போது, ஆரம்பமாகுகிறது ஊருக்குள் களேபரம்...
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறையில் தனியார் பேருந்துக்கென ஒதுக்கப்ட்ட நேரத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக தெரிகிறது
தாங்கள் செல்ல வேண்டிய நேரத்தில், தங்களுக்கு முன் அரசு பேருந்து செல்வதை கண்டு ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர், பேருந்தை ரோட்டிலே நிறுத்திவிட்டு அரசு பேருந்தை மறித்து தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது....
கடைசி வரை பேருந்து இருக்கையில் இருந்து கீழே இறங்காத அரசு பேருந்து ஓட்டுநர், திடீரென இருக்கையில் இருந்து கீழே இறங்கி "வாடா மோதி பாத்துக்கலாம்" என அஞ்சான் ராஜூவ் பாயாக சட்டையை கழட்டி தனியார் பேருந்து ஓட்டுநரை சண்டைக்கு அழைத்தது பரபரப்பை மேலும் கூட்டியது...
இந்த தகராறிற்கு நடுவே வடிவேல் பட பாணியில் தனியார் பேருந்து நடத்துநர் செல்போனில் வீடியோ எடுத்தவாறு குறுக்கவும், மறுக்கவும் வந்து கொண்டிருக்க... உடனே அலர்ட்டான அரசு பேருந்து ஓட்டுநர் பம்மி பின்வாங்கினார்...
இந்நிலையில், இந்த களேபேரத்திற்கு மத்தியில் திடீரென கொதித்தெழுந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தகராறில் தகாத வார்த்தைகள் கூறி சண்டையிட்ட பேருந்து ஊழியர்களை நோக்கி, எங்க ஏரியாவுக்குள்ள வந்து அதுவும் பொம்பளை புள்ளைங்க இருக்குற இடத்துல எப்படி நீங்க கெட்ட வார்த்தை பேசலாம் என கொந்தளித்தார்...
ஊர் மக்கள் பூரித்து போய் அந்த இளைஞரை பாக்க, அடுத்த நிமிடத்திலே பேருந்து ஊழியர்களை திட்டும் சாக்கில் அவர்கள் பேசிய தகாத வார்த்தைகளை விட, இளைஞர் அதிகம் தகாத வார்த்தை பேசிய நிலையில்... அவனாவது நாலு வார்த்தைதாண்ட பேசுனா.. ஆனா நீ.. என ஊர்மக்கள் முகம் சுளித்தனர்...
இப்படி அந்த பகுதியே பரபரப்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு பேருந்து ஓட்டுநர்களையும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்த நிலையில், இரு தரப்பினரும் சுமூகமாக கலைந்து சென்றனர்..