"ஒருபோதும் எடுபடாது" - ஜெயக்குமார் போட்ட பரபரப்பு ட்வீட்
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு தனது சூழ்ச்சிகளை மறைக்க அஇஅதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க நினைப்பது, அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, டங்ஸ்டன் விவகாரம் குறித்து விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஏலம் அறிவிக்கப்பட்டது முதல் நவம்பர் 7ம் தேதி அன்று, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் வரை, 10 மாத காலம் வாயை இறுக்க முடி கொண்டு, ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த திமுக அரசு,
மக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக, வேறுவழியின்றி முதலமைச்சர், பிரதமருக்கு சுரங்க அனுமதியை ரத்து செய்யுமாறு நவம்பர் 29ம் தேதி கடிதம் எழுதியுள்ளதாக ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதம் கிடைக்க பெற்றவுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் தள பதிவு மூலமாக,
"இதுவரை மாநில அரசிடம் எந்தவித எதிர்ப்போ, ஏலத்தை கைவிடுமாறு கோரிக்கையோ எங்களுக்கு வரவில்லை" என்ற பதிலை அதே நாளில் பூமராங் போன்று திருப்பி அனுப்பியதை பற்றி இன்று வரை திமுக பேச மறுப்பது ஏன்? என்றும் ஜெயக்குமார் வினவியுள்ளார்.