27 நிமிடத்தில் 41 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (29.07.2023)
என் மண் என் மக்கள் பாத யாத்திரை, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப ஆட்சி, ஊழல், சட்ட ஒழுங்கின்மையை, சீர்ப்படுத்தும் யாத்திரை ஆகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். மேலும், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று முதலிடத்தை வகிக்கும் எனவும் இந்த பொதுக்கூட்டம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் என்றும் கூறினார். கூட்டத்தின் நிறைவாக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கைகளை கோர்த்த படி நின்றனர்.
அரசியல் அதிகாரம் கருணாநிதி குடும்பத்தின் நிரந்தர சொத்தாக மாறி விடக்கூடாது என அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். அதை தடுத்து நிறுத்துவதறகு, பிரதமர் மோடியின் தூதுவராக இங்கு உள்துறை மந்திரி அமித் ஷா வந்திருப்பதாக கூறினார். நாட்டில் ஜனநாயகம், வளர்ச்சி தொடர பிரதமராக மோடி தொடரவேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
எல்.முருகனின் வேல் யாத்திரைக்கு கிடைத்த முடிவுதான் அண்ணாமலையின் யாத்திரைக்கும் கிடைக்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை அயப்பாக்கத்தில் பேசிய அவர், அண்ணாமலை யாத்திரைக்கான பலன் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு முடிவு தெரிந்துவிடும் எனக் கூறினார்.
ஆரிய வர்க்கத்தை எதிர்க்கவே திமுகவுடன் கரம் கோர்த்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். திருச்சியில் பேசிய அவர், ஆழ்ந்த யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். மேலும், தமிழக நலன்களை பாதுகாப்பதில் நம் அளவுக்கு யாரும் பாடுபட்டதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.