ரூ.10 லட்சம் மோசடி - தம்பதியர் தற்கொலை முயற்சி
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன்- பாமா தம்பதியரிடம், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெருமாள்சாமி என்பவர், 10 லட்சம் ரூபாயை பெற்று, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வட்டி தருவதாக கூறியுள்ளார். கடந்த 15 மாதங்களாக வட்டி தராத நிலையில், கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும் பணத்தை திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கள் மூத்த மகளுக்கு கல்லூரி படிப்புக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் விரக்தியடைந்த தம்பதியர், பூச்சி மருந்தை குடித்தனர். பின்னர் 2 பெண் குழந்தைகளுக்கும் கொடுக்க முயன்றபோது, அங்கு வந்த உறவினர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து வெங்கடேசன் மற்றும் பாமா, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.