கோலியின் உயிருக்கு ஆபத்தா?..நடந்தது என்ன? - வெளியான பரபரப்பு விளக்கம்
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்துள்ளது.
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டிக்கு முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து குஜராத் போலீசார் எச்சரிக்கையின் அடிப்படையில், பெங்களூரு அணியின் பயிற்சி முகாம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என, குஜராத் கிரிக்கெட் சங்க செயலாளர் அனில் படேல் தெரிவித்துள்ளார். குஜராத் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை பெங்களூரு அணி பயிற்சி செய்ய திட்டமிட்டதாகவும், ஆனால் கோடைக்காலம் என்பதால் 3 முதல் 6 மணி வரை பயிற்சி செய்ய திட்டத்தை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதிக வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாகவும் அனில் படேல் தெரிவித்துள்ளார்.