சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த தவான் - சாதனைப் பயணம்
அதிரடி ஆட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்த வீரர்... எப்பேர்ப்பட்ட பவுலருக்கும் அசராத தீரர்... களத்தில் அவர் நிலைத்து நின்றுவிட்டால் எதிரணி பவுலர்களுக்கு கையறுநிலைதான்...
இந்திய அணியில் அதிரடி இடது கை தொடக்க ஆட்டக்காரராக கங்குலிக்குப் பிறகு பிரகாசித்தவர், தவான்... கங்குலியைப்போல் பயமறியாதவனாகத்தான் தவானும் வலம் வந்தார்.
2010ம் ஆண்டு.... அறிமுக ஒருநாள் போட்டி தவானுக்கு அவ்வளவு ஆனந்தமானதாய் அமையவில்லை. பூஜ்யத்தில் அவரது பயணம் ஆரம்பம் ஆனது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் பூஜ்யங்கள் சதங்களாக மாற்றம் கண்டன. நிலையான ஓபனராக ஏற்றம் கண்டார் தவான்....
ஆம்... தவானின் அறிமுக ஒருநாள் போட்டி மறக்க வேண்டியதாக இருந்தாலும் அவரது அறிமுக டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மொஹாலி மண்ணில் 187 ரன்கள் அடித்த தவான், அறிமுக டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என வரலாற்றின் பக்கங்களில் தன் பெயரை செதுக்கிக்கொண்டார்.
2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெற்றி வாகை சூட முக்கிய பங்கு வகித்தார் தவான்... 2 சதங்களுடன் 363 ரன்கள் அடித்து கோல்டன் பேட் ( bat ) விருதையும் வென்ற தவான், தனக்கான தனி ராஜ்யத்திற்கு அடித்தளமிட்டுக்கொண்டார்.
டெஸ்ட் போட்டிகளைக் காட்டிலும் ஒருநாள் போட்டிகளில் தான் தவானின் தனித்துவம் மிளிர்ந்தது. 2015 உலகக்கோப்பை தொடர்... 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்... இரண்டிலும் இந்தியாவின் லீடிங் ரன் ஸ்கோரர் தவான் தான்...
குறிப்பாக ஐசிசி தொடர்கள் என்றால் தவான் தன்னைத் தானே புத்துயிர்த்துக் கொள்வார். வேறொரு பரிணாமத்தில், கட்டுப்படுத்த இயலாத காட்டாறாகத்தான் தவானை நீங்கள் ஐசிசி தொடர்களில் காண முடியும்... 2019 உலகக்கோப்பை தொடரில்,, உடைந்த விரலுடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவரடித்த சதமே இதற்கு சாட்சி...
தவானின் அப்பர் கட் ஷாட்கள் அநாயசமானவை... அவரின் டிரைவ்கள் துப்பாக்கியில் விசைபட்டுப் பாயும் தோட்டாக்களுக்கு நிகர்த்தவை...
மிஸ்டர் ஐசிசி... GABBAR.... என தவானுக்கு இன்னும் பல பட்டங்கள் தந்த ரசிகர் பட்டாளம், அவரது ஐகானிக் செலபிரசனையும் (celebration) கொண்டாடத் தவறியதில்லை...
2020ம் ஆண்டுக்குப் பிறகு ஃபார்ம்-அவுட், அடுத்த தலைமுறை வீரர்கள் வருகை, இன்னும் சில காரணங்களால் இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார் தவான்...
Off the field-ல் நகைச்சுவைக்கு பெயர்போன தவானிற்கு தனிப்பட்ட வாழ்வு அவ்வளவு உவப்பானதாய் அமையவில்லை. விவாகரத்துக்குப் பிறகு மகன் சோரோவரைக் காண அவர் ஏக்கத்துடன் எழுதிய பதிவுகளை எளிதில் கடந்துவிட முடியாது.
38 வயதில் ஓய்வை அறிவித்துள்ள தவானுக்கு இனி வரும் நாட்கள் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவுள்ள சூழலில், கிரிக்கெட்டில் தனக்கென தனியொரு தடத்தைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார் தவான்....