பாராலிம்பிக்கில் இந்தியா புதுப்பாய்ச்சல்...

x

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன.

பாராலிம்பிக்கிற்கு 84 வீரர்கள் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியது. இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே பதக்க வேட்டை நடத்தினர்.

இந்தியாவிற்கு முதல் பதக்கமே தங்கம்தான்... மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் அவனி லெக்காரா.... இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.


துப்பாக்கி சுடுதலில் மனீஷ் நர்வால் மற்றும் ரூபினா ஃபிரான்ஸிஸ் பதக்கங்களை வசப்படுத்தினர்.

T35 பிரிவு 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று அதகளப்படுத்தினார்.

F56 பிரிவு வட்டெறிதலில் யோகேஷ் கத்துனியா,, T47 பிரிவு உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார்,, F46 பிரிவு குண்டெறிதலில் சச்சின் கிலாரி வெள்ளியும் வென்றனர்.

பேட்மிண்டனில் இந்தியா இம்முறை பதக்கங்களை அடுத்தடுத்து வென்று குவித்தது. SL3 பிரிவு பேட்மிண்டனில் நிதேஷ் குமார் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.

தமிழக வீராங்கனைகள் துளசிமதி, மனீஷா, நித்ய ஸ்ரீ பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.

உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வென்று சரித்திரத்தின் பக்கங்களில் தன் பெயரை செதுக்கிக்கொண்டார்.


பாராலிம்பிக் வரலாற்றில் ஜூடோ போட்டியில் முதல் முறையாக இந்தியா பதக்கத்தை வசப்படுத்தியது. 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் கபில் பர்மார்...

தனிநபர் ரிக்கர்வ் பிரிவு வில்வித்தைப் போட்டியில் ஹர்விந்தர் சிங் தங்கம் வெல்ல, க்ளப் த்ரோ போட்டியில் தாராம்பிர் தங்கம் வென்றார்.


ஈட்டியெறிதலிலும் இந்திய வீரர்கள் முழு ஆதிக்கம் செலுத்தினர். F64 பிரிவில் சுமித் அன்ட்டில், F41 பிரிவில் நவ்தீப் சிங் தங்கம் வென்று ஈட்டியெறிதலில் இந்தியாவின் பலத்தை பறைசாற்றினர்.


தடகள போட்டிகளில் மட்டும் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது. இதற்கு அடுத்தபடியாக பேட்மிண்டனில் 5, துப்பாக்கி சுடுதலில் 4, வில்வித்தையில் 2, ஜூடோவில் ஒரு பதக்கம் வென்றது.


7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வசப்படுத்திய இந்தியா, 18வது இடத்தைப் பிடித்தது.


முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா இம்முறை 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ஒரு பாராலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்கள் இதுவாகும்... ஒட்டுமொத்தத்தில் பாரிஸ் பாராலிம்பிக்கில் புதுப்பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது இந்தியா...


பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த இந்தியா


போட்டி - பதக்கம்

தடகளம் - 17

பேட்மிண்டன் - 5

துப்பாக்கி சுடுதல் - 4

வில்வித்தை - 2

ஜூடோ - 1


தங்கம் - 7

வெள்ளி - 9

வெண்கலம் - 13

மொத்த பதக்கம் - 29

இந்தியா 18வது இடம்


Next Story

மேலும் செய்திகள்